தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறது.
அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விலையில்லா மகளிர் பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு மாநில மகளிர் வரைவு கொள்கையை தமிழக அரசு வெளியிட்டதோடு அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வரையறை அறிக்கை தயார் செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.
இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதிவாணனைத் தவிர அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.மு.க ஸ்டாலின் தலைமையிலான இந்த அமைச்சரவை மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது