கோவை: நாய்கள் கடித்து குதறியதில் மானுக்கு உடலின் பல்வேறு இடங்களில் ரத்தம் கொட்டியது. ரத்தம் வழிந்த இடத்தில் பொதுமக்கள் மஞ்சள் தூள் வைத்து முதலுதவி அளித்தனர்.
கோவை ஆனைக்கட்டி சாலை தடாகம், கணுவாய், மாங்கரை, உள்ளிட்ட பகுதிகள் மலை மற்றும் வனத்தை ஒட்டி உள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமான்(3-4 வயது இருக்கும்) ஒன்று வழித்தவறி திருவள்ளுவர் நகர் ஊருக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் அந்த மானை பார்த்த தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளன. இந்த சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தெருநாய்களை துரத்தி உள்ளனர்.
பின்னர் அந்த புள்ளிமான் அருகில் இருந்த ஒரு வீட்டில் வளாகத்திற்குள் சென்று பதுங்கியது. நாய்கள் கடித்ததால் மானின் உடலில் பல்வேறு இடங்களில் இரத்தம் வெளியேறிய நிலையில் ஊர்மக்கள், உடனடியாக மானை பிடித்து இரத்தம் வந்து கொண்டிருந்த இடத்தில் மஞ்சள் தூள் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் மானுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மாங்கரை சோதனைச் சாவடிக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே அங்கு வந்த நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் விகேவி சுந்தரராஜிடம் தங்கள் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகல், அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.