கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. உரம், பூச்சி மருந்து, கட்டிட மேம்பாடு, கட்டிட பழுது நீக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடையூறு ஏற்படும் வகையில் சட்டங்கள் மற்றும் வழிகாட்டல் நெறிமுறைகள் இந்த வரைவு அறிவிப்பு ஆணையில் உள்ளன.
இந்த அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் தரப்பில் வருகிற 29-ந் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தொழிற்சங்கம் தரப்பில் தோட்ட அதிபர்கள் மற்றும் அரசுக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தோட்ட அதிபர்கள் சங்கத்தினர், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை கோவை ஏ.டி.டி. காலனியில் உள்ள தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தோட்ட அதிபர்கள் தரப்பில் ஏற்கனவே தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதால் வேலை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். இது தொடர்பாக அரசிடம் முறையிடுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் தொழிற்சங்கத்தினர் தரப்பில் சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் திட்டமிட்டபடி வருகிற 29-ந் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்
இதுகுறித்து தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி.அமீது கூறியதாவது:- தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி வருகிற 29-ந் தேதி தோட்ட தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து உள்ளோம். இந்த போராட்டத்தில் பங்கேற்க வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கார், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து தொழிற்சங்கங்கள் சார்பாக அழைப்பு விடுக்க உள்ளோம். எங்களின் கோரிக்கையை ஏற்று வால்பாறையில் சுற்றுச்சூழல் உணர்திறன் ஆணையை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உட்பிரையர் குரூப் பாலச்சந்திரன், ரஞ்சித் கட்டப்புரம், பாரி அக்ரோ முரளி பனிக்கர், முடீஸ் குரூப் வினோத் திம்பையா, எல்.பி.எப். வினோத்குமார், சவுந்திரபாண்டி, ஐ.என்.டி.யு.சி. கருப்பையா, ஏ.ஐ.டி.யு.சி. மோகன், கவுன்சிலர்கள் வீரமணி, வேல்முருகன், வி.சி.க. கேசவ மருகன், வர்க்கீஸ்,
டாடா குரூப் மேலாளர், ஜெயஸ்ரீ, வாட்டர் பால் நிர்வாகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்
சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் வரும் 29-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம்..!
