கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஸ்டிராங்கா இருந்தாரே.. அரசியலிலிருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவிப்பு..!

சென்னை: அரசியலிலிருந்து விலகுவதாக நமது எம்ஜிஆர் மற்றும் நமது அம்மா நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இது காலம் வரை முதுகு தட்டி கொடுத்தவர்களுக்கு நன்றி.

என் கருத்துகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவர் மருது அழகுராஜ்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த நாளிதழ் சசிகலா தரப்பினர் கைக்கு சென்றதை அடுத்து அதிலிருந்து விலகினார். தற்போது அந்த நாளிதழை சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் நிர்வகித்து வருகிறார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைப் பொறுப்புக்கு வந்தனர்.

இதையடுத்து அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ நாளிதழ் வேண்டும் என முடிவு செய்து ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி 2018ஆம் ஆண்டு நமது அம்மா எனும் நாளிதழ் தொடங்கப்பட்டது. இந்த நாளிதழின் ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சினையால் அக்கட்சி தற்போது இரு அணிகளாக பிளவை சந்தித்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஜூன் 29ஆம் தேதி நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து அழகு மருதுராஜ் விலகினார். இந்த நிலையில் இன்று அரசியலிலிருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார். கொடநாடு எஸ்டேட் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டு உண்மையான குற்றவாளியை முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிக்குவார் என்று எதிர்பார்த்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் 51 ஆவது நிறுவன நாள் அன்று வெள்ளை புறாவை ஓபிஎஸ் பறக்கவிடும் போட்டோவை பகிர்ந்த மருது அழகுராஜ் ஒரு கவிதையை எழுதியுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:

*சுறாவும்*
*புறாவும்* ..
சக மீன்களை
விழுங்கிப்
பிழைக்கும்..
சண்டாளச்
சுறாக்களுக்கு
புரியாது
நீ வானில்
பறக்கவிடும்
சமாதானப்
புறாக்களின்
வலிமை
என்ன
வென்று…
ஆனாலும்
தன் அடியில்
செடியை
தழைக்க
விடாத
ஆல
விருட்சத்தை
விட
கூடி வளரும் துளசிச்
செடியே
அருமருந்து
அவசியம்
என்பதை
அண்ணா
திமுக
தொண்டன்
அறிவான்..
மருது…

இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் 51 ஆவது நிறுவன நாள் அன்று வெள்ளை புறாவை ஓபிஎஸ் பறக்கவிடும் போட்டோவை பகிர்ந்த மருது அழகுராஜ் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.