டெல்லி: மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அர்ஜூன் ராம் மேக்வால் புதிய மத்திய சட்ட அமைச்சராக பதவியேற்றார்..
சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார். சட்ட அமைச்சராக இருந்து கொண்டு கொலிஜியத்திற்கு எதிராக கிரண் ரிஜ்ஜு தொடர்ந்து பேசி வந்த நிலையில்தான் அவர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்ய கொலிஜியம் என்ற அமைப்பு உள்ளது. இந்த கொலிஜியம் செயல்படும் முறை என்பதில் நிறைய புதிர்கள் உள்ளன என்று பாஜக விமர்சனம் செய்து வருகிறது. இந்த கொலிஜியம்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதில் பரிந்துரைகளை செய்யும்.
பல வரையறைகளை வைத்து நீதிபதிகளை இந்த கொலிஜியம் தேர்வு செய்யும். இந்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் மத்திய அரசின் வேலை. கொலிஜியம் செய்யும் பரிந்துரையை மத்திய அரசு எதிர்ப்பு இல்லாமல் ஏற்க வேண்டும்.
அதாவது கொலிஜியம் என்ன சொல்கிறதோ அதற்கு எதிர்ப்பு எல்லாம் சொல்லாமல் மத்திய அரசு பரிந்துரையை ஏற்க வேண்டும். ஆனால் சமயங்களில் கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காமல் மீண்டும் பரிசீலனை செய்ய திருப்பி அனுப்பிய சம்பவங்கள் நடந்து உள்ளன.
உதாரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப்பை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறது. ஆனாலும் கொலிஜியம் தொடர்ந்து பரிந்துரை செய்ததால் வேறு வழியின்றி மத்திய அரசு கொலிஜியம் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் கே. எம் ஜோசப் நியமனம் என்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நியமனம் ஆகும்.
மத்திய அரசுக்கும் – கொலிஜியத்திற்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில், 5 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தற்போது தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கேஎம் ஜோசப், எம்ஆர் ஷா, அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் கடந்த பிப்ரவரி 16, 2022 புதிய நீதிபதிகளுக்கான பரிந்துரைகளை மேற்கொண்டனர். அதில் வழக்கறிஞர் ஆர் ஜான் சாத்தியனை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை மேற்கொண்டனர். இவரின் நியமனம் உட்பட மொத்தம் 5 நீதிபதிகளின் நியமனத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்காமல் மத்திய அரசு இதற்காக அனுப்பிய கடிதத்திற்கு தற்போது கொலிஜியம் வெளிப்படையாக பதில் அளித்தது.
உதாரணமாக வழக்கறிஞர் சோரப் கிர்பாலை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு, அவர் தன்பாலின உறவுக்காரர். அவர் நடுநிலையாக இல்லாமல் போக வாய்ப்புள்ளது. அதோடு அவரின் இணையர் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்தவர் என்ற பதிலை அளித்துள்ளது.
இந்த பதிலை பொதுவில் பகிர்ந்துள்ள கொலிஜியம், அதற்கு அளித்த பதிலில், நமது அரசியலமைப்பு சட்டத்தில் பாலியல் தேர்வுக்கும், பாலின சமத்துவத்துக்கும் இடம் உள்ளது. கிர்பால் நியமனம் டெல்லி ஹைகோர்ட்டில் பன்முகத்தன்மையை ஏற்படுத்தும். வெளிநாட்டை சேர்ந்த இணையர் இருப்பதால் ஒருவரின் நீதிபதி நியமனத்தை எதிர்க்க முடியாது, என்று கொலிஜியம் பதிலில் கூறி உள்ளது.
அதேபோல் வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசனை மும்பை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு எதிர்த்து உள்ளது. இதற்கு மத்திய அரசு, சுந்தரேசன் சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.
அவர் பெண்டிங் இருக்கும் வழக்குகள் பற்றி பேசி இருக்கிறார். அதனால் அவரை நியமிக்க கூடாது, என்று பதில் அளித்துள்ளது. இந்த பதிலை பொதுவில் பகிர்ந்துள்ள கொலிஜியம், அதற்கு அளித்த பதிலில், ஒருவர் தனது தனிப்பட்ட கருத்தை சொல்வதால் அவரை நீதிபதியாக நியமிக்க முடியாது என்ற விதி இல்லை, என்று கொலிஜியம் பதிலில் கூறி உள்ளது.
இதேபோன்று மற்ற நீதிபதிகளையும் வெவ்வேறு காரணங்களுக்காக பாஜக அரசு எதிர்த்தது.
மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜ்ஜு தொடர்ந்து கொலிஜியம் தேர்வு முறையை எதிர்த்து வந்தார். கொலிஜியம் தேர்வு முறை புதிராக உள்ளது. இதில் தேர்வுகள் மறைமுகமாக இல்லை. இதில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும், நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தா கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு அவர் கடிதமும் எழுதி இருந்தார் . ஏற்கனவே இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அனுப்பப்பட்ட கடிதம் இது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில்தான் தற்போது அவர் சட்ட அமைச்சர் பதவியில் இருந்தே மாற்றப்பட்டு உள்ளார்.