பராமரிப்பு நிலையத்தில் வளர்ப்பு நாய் திடீர் மரணம் – மருத்துவமனை மேலாளர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரத் (வயது 30) இவர் தனது வீட்டில் 11 வயதான பொமரேலியன் ஆண் நாய்க்கு சஞ்சு என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். சரத்தின் தங்கைக்கு திருமண நிச்சயம் நடைபெற இருந்தது .அதில் கலந்து கொள்ள அவர் செல்ல வேண்டியது இருந்ததால் கடந்த 20ஆம் தேதி காலை தனது வளர்ப்பு நாயை கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனியில் உள்ள விலங்குகள் மருத்துவமனைக்கு சென்று ஒரு நாள் மட்டும் நாயை பராமரிக்குமாறு கூறி ஒப்படைத்து விட்டு சென்றார். இதையடுத்து அந்த மருத்துவமனையில் இருந்து சரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய வளர்ப்பு நாய்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே மருத்துவமனையில் சென்று பார்த்தார். அப்போது அங்கு நாய் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் அந்த நாயின் முகம் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன. இது குறித்து அவர் கேட்ட போது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை .இது பற்றி அவர் கொடுத்த தகவலின் பெயரில் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த வளர்ப்பு நாயை கட்டி அணைத்து கதறி அழுதனர். மேலும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர் . அதை தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கு இடையே இறந்து கிடந்த வளர்ப்பு நாயை பார்த்து சரத்தின் உறவுக்கார பெண்கள் கதறி அழுது காட்சி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து சரத் கொடுத்த புகார் என்பவரின் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வளர்ப்பு நாயின் கழுத்தை சங்கிலியால் கட்டியுள்ளனர் .அது புதிய இடம் என்பதால் நாய் திடீரென்று கிழே குதித்துள்ளது. அப்போது சங்கிலி கழுத்தை இருக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு நாய் பரிதாபமாக இறந்தது என்பது தெரியவந்தது. இதுகுறித்து விலங்கு மருத்துவமனை மேலாளர் செல்வம் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..