சென்னை : நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் புதிய காலனி பகுதியில் வசிக்கும் அப்துல் ரசாக் என்பவரின் வீட்டில் அதிகாலை முதலே 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அவரது செல்போன் அழைப்புகளை ஆராய்ந்த அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்பில் உள்ளாரா என விசாரித்தனர். புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரில் வசித்து வந்த ரசாக், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதிக்கு குடியேறி உள்ளார்.
இதே போல், மதுரை நெல்பேட்டையில் தடை செய்யப்பட்ட ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வங்கிக் கணக்கில் நிதி பரிமாற்றம் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பழனியில் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசரிடம் என்ஐஏ விசாரணை நடத்திய நிலையில், அவரை கைது செய்தனர். ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் அவர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் தேனி கம்பம்மெட்டுவில் சோதனையை முடித்து எஸ்டிபிஐ நிர்வாகி சாதிக் அலியை விசாரணைக்கு அழைத்து சென்றது என்ஐஏ. தேனி, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.