கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் போலீசார் 2 குழுவினராக பிரிந்து கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ,கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினார். உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைகள் மேஜைகள் ,குப்பை தொட்டிகள் ,ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர் அப்போது வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது .
இதேபோல் கோவை வடக்கு ஆர்.டி.ஓ .அலுவலகம் மற்றும் மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஆகிய இடங்களில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ. 73 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வாகனம் வருவதை கண்டதும் அலுவலகம் முதல் மாடியில் இருந்து புரோக்கர் ஒருவர் திடீரென்று கீழே குதித்தார். இதில் அவரது கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கோவைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் அவர் சிங்காநல்லூரை சேர்ந்த பழனிசாமி (வயது 42) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வாகனத்தை பார்த்ததும் மற்றொரு நபர் முதல் மாடியின் பின்பக்கம் வழியாக குதித்து தப்பி ஓடிவிட்டார் .கீழே குதித்த இருவரும் புரோக்கர்களாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தினார்கள் டி.எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் இந்த சோதனை நடந்தது. அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் இடைத்தரகர்கள் என 15 பேரிடம் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் இடைத்தரகர்களிடடமிருந்து கணக்கில் வராத ரூ.1,லட்சத்து 25 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்..