கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையன்(63). விவசாயி. இவரது மனைவி சரோஜா(55). கடந்த 21 ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் கொலையில் துப்பு துலக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் ஆய்வாளர்கள் வேளாங்கண்ணி உதய ரேகா,நித்யா, உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம்,பாண்டியராஜன்,சுல்தான் இப்ராகிம், ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.கொலை சம்பவம் நடந்த போது மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த ஒரு சில நகைகளை மட்டும் திருடி சென்றுள்ளனர். ஆனால் மூதாட்டி சரோஜா அணிந்திருந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்செல்லவில்லை.இந்த நிலையில் ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வசந்தகுமார்(19) இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்ப்பட்டு அவரை தேடி வந்தனர்.இந்த நிலையில் போலீசார் சிறுமுகை தென்திருப்பதி நால் ரோடு பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது அந்த வழியில் வந்த வசந்தகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இறந்த சரோஜா வசந்தகுமாரின் தாயாரிடம் துணி தைக்க கொடுப்பது வழக்கம். இதை பயன்படுத்திக் கொண்ட வசந்தகுமார், சரோஜா வீட்டிற்கு சென்று அவரிடம் பணம் கேட்டு உள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்தகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரோஜாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வசந்தகுமார் அங்கிருந்த 20 பவுன் தங்க நகையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் இந்த கொலை குற்றத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.