மூடநம்பிக்கை பேச்சு… சென்னை திரும்பிய மகாவிஷ்ணு… விமான நிலையத்தில் வைத்தே கைது செய்த போலீஸ்.!!

சென்னை: தன்னம்பிக்கை பேச்சாளர் என்று கூறிக்கொண்டு, பகுத்தறிவுக்கு எதிரான, மூடநம்பிக்கை கருத்துக்களை பேசிய மகாவிஷ்ணுவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இன்று சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்திலேயே வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆக.28ம் தேதி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் என சொல்லிக்கொள்ளும் மகாவிஷ்ணு எனும் நபர் சிறப்புரை ஆற்றியிருந்தார். அவர் பேசிய விஷயங்கள் குறித்த வீடியோ நேற்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பினர். அவர் சனாதனத்தை பேசுகிறார் என்று புகார்கள் எழுந்தன.

ஏழைகள், மாற்றுத்திறனாளிகளை முன் ஜென்ம பாவத்தின் பலன்” என முன்ஜென்மம், மறு ஜென்மம், பாவம், புண்ணியம் குறித்து பேசியிருக்கிறார். இவரது கருத்து அவர் அறிவியலுக்கும், கல்விக்கும் புறம்பாகவும், மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் வகையிலும், மாணவிகளிடையே மத பிரிவினையையும், மூட நம்பிக்கையையும் தூண்டும் விதமாக இருந்தது என்பதுதான் குற்றச்சாட்டு.

மட்டுமல்லாது அவர் பேசிய கருத்துக்கள் தவறு என்று, பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் கேள்வி எழுப்பினார். இதை கேட்டுக்கொள்ளாத மகாவிஷ்ணு, அந்த ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். “உங்கள் பெயர் என்ன? இவ்வளவு காலம் ஆசிரியர்களால் போதிக்க முடியாத கல்வியை ஆன்மீகம் என்ற பெயரில் நான் போதித்து வருகிறேன். இதற்கு ஆசிரியர்கள் எனக்கு நன்றி கூற வேண்டும்” என்று கூறினார்.

உடனே குறுக்கிட்ட ஆசிரியர் சங்கர், அரசு பள்ளிகளில் ஆன்மிகம் பேசக்கூடாது என்று தெளிவுபடுத்தினார். இதையும் ஏற்றுக்கொள்ளாத மகாவிஷ்ணு, “அரசு பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா? உங்கள் முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் அறிவு பெற்றவரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து, மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர். சென்னை சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை தொடங்கியது. திருப்பூரில் மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான இடத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். ஆனால், மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருப்பது பின்னர்தான் தெரிய வந்தது.

மாநில அரசின் நிதியை முழுமையாக பெற்று இயங்கக்கூடிய எந்த ஒரு கல்வி நிறுவனமும் மதச்சார்பு தன்மையில் செயல்படக் கூடாது என்பதையே இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 28 வலியுறுத்துகிறது. ஆனால் அங்கு நடைபெற்ற நிகழ்வில் அவர் மதச்சார்புடைய கருத்துக்களை பேசியதுடன் சாதிய படிநிலைகளை நியாயப்படுத்தும் விதத்தில் பேசுவதற்கு யார் அனுமதி கொடுத்தது? தமிழக அரசின் கீழ் செயல்படக்கூடிய பள்ளிகளில் இந்துத்துவா கருத்துகளை பரப்பக்கூடிய இத்தகைய நபர்கள் எந்த அடிப்படையில் மாணவர்களிடையே உரையாற்ற பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்தது? என பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பினர்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார். அதேபோல கல்வி நிலையங்களில் பேசுவது குறித்து முதலமைச்சர் சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

அதே நேரம் மாற்றுத்திறனாளிகள் கொடுத்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீஸ் கைது செய்ய தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் இன்று மதியம் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அவரை போலீசார், விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருக்கின்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.