அதில் அதிகபட்சமாக நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது. மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. 187 தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த 15ஆம் தேதிஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (18-03-24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்புப்படி பத்திர எண்களை வெளியிட வேண்டும். தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. இந்த வழக்கின் தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ வங்கியின் அணுகுமுறை சரியில்லை. ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள எண்ணையும் ஏன் எஸ்.பி.ஐ வங்கி இன்னும் தெரிவிக்கவில்லை?. தேர்தல் பத்திரம் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். மறைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் எஸ்.பி.ஐ பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். இந்த தேர்தல் பத்திர எண்களை வரும் மார்ச் 21-ஆம் தேதிக்குள் அனைத்தையும் வெளியிட வேண்டும்’ என்று கூறி உத்தரவிட்டனர்.