ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் செயல்பட்டதாக லோக்பால் அமைப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை கடந்த மாதம் 27 ஆம் தேதி லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி மீதும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட கூடுதல் நீதிபதி மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த லோக்பால் உத்தரவு பிறப்பித்தது. பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லோக்பால் சட்டப்படி உள்ள அதிகாரத்தை உறுதிசெய்ய வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்ப உத்தரவிட்டனர்.
அதுவரை சம்பந்தபட்ட உயர் நீதிமன்ற நீதிபதி மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி. ஆர்.கவாய், சூர்யகாந்த், அபே ஓகா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி மீது லோக்பால் அமைப்பு வழக்கு பதிவு செய்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இது குறித்து ஒன்றிய அரசுக்கும், லோக்பால் அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது லோக்பால் அமைப்பு விசாரணை நடத்துவதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், இது நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான மிக முக்கிய பிரச்சனை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.