இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘பாமக தொடங்கியது முதல் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று புதன்கிழமை பொதுக் கூட்டத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக உள்ள நிலையில் அனுமதி வழங்க காவல்துறையினா் மறுத்துள்ளனா். வடலூா் சந்திப்பில் அனுமதிக்காவிட்டால் குள்ளஞ்சாவடியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
வேறு மாவட்டத்தில் நடத்த… இதைத் தொடா்ந்து அரசு தரப்பில், ‘விவசாயிகளுக்கு ஆதரவாக என்எல்சி-யை எதிா்த்து பாமக போராட்டம் நடத்தியபோது, 27 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது உள்ளிட்ட புகாா்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்சியின் செயல்பாடு வெளிப்படுகிறது. தற்போது அதே இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்கின்றனா்.
இதை ஏற்று அனுமதி கொடுத்தால் என்எல்சி நிா்வாகத்துக்கு எதிராகப் பேசும்போது, மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும், காவல்துறை மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே கடலூா் மாவட்டத்துக்கு வெளியே பொதுக்கூட்டம் நடத்தினால், அதற்கு அனுமதியளிக்கத் தயாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொதுக் கூட்டம் நடத்தும் அரசியல் கட்சியின் உரிமையைத் தடுக்க முடியாது என்றாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த காவல்துறையின் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறி, கடலூா் மாவட்டத்தில் பாமக பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தாா். மேலும், விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து பாமக முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையை அணுகலாம் என்றும், அதில் அனுமதி வழங்கப்படும்பட்சத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன் அந்த பொதுக்கூட்டத்தில் நெய்வேலி போராட்டம் குறித்து பேசக்கூடாது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு கட்சியினரை வழி நடத்த வேண்டிய பொறுப்பு கட்சித் தலைமைக்கு உள்ளது. மீறி பிரச்னை ஏற்பட்டால் கட்சித் தலைமையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா். மேல் முறையீடு செய்ய… இந்த உத்தரவைப் பிறப்பித்த பிறகு, மனுதாரா் தரப்பில் கடலூரில்தான் கூட்டம் நடத்த பாமக திட்டமிட்டுள்ளதாகவும், வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை எனவும் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.