சென்னை: பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மறு பிரேதப் பரிசோதனை நடத்தவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் கோரி சின்னசேலம் மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி பள்ளியின் விடுதியில் கடந்த 13-ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இது நேற்று கலவரமாக மாறியது.
இதற்கிடையே, மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி, மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: மகள் உயிரிழந்தது குறித்த தகவல் கிடைத்ததும், பள்ளிக்கு சென்றோம். மகள் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் சக மாணவிகளை பார்ப்பதற்காக சென்ற எங்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது.
உடலின் பல இடங்களில் காயங்கள் உள்ளன. முதலில் நடந்த பிரேதப் பரிசோதனையின்போது, உடன் இருக்க எங்களை அனுமதிக்கவில்லை. எனவே, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவும், சந்தேக மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரவும், நாங்கள் தெரிவிக்கும் மருத்துவர் குழுவால், உடலை மறு பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டு தலின்படி பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்படவில்லை. எனவே, மறு பிரேதப் பரிசோதனைக்கும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. பிரேதப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, அறிக்கை ஆகியவை விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.