பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து… நேரடியாக மன்னிப்பு கேட்கும் எஸ்வி சேகர் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக அவர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் எஸ்வி சேகர் தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரராக பெண் பத்திரிகையாளர்களை சேர்க்க வேண்டும் என்று கூறி உத்தரவிடப்பட்டது.

நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் எஸ்வி சேகர். இவர் முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்தார். இவர் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து எஸ்வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். அதனை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது. அதுமட்டுமின்றி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

இது எஸ்வி சேகருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எஸ்வி சேகர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சூரியகாந்த் விசாரணை மேற்கொண்டார்.

எஸ்வி சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”எஸ்வி சேகர் தவறுதலாக கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டும் கூட இந்த உயர்நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் அவரது தண்டனை, அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

அதற்கு உச்சநீதிமன்றம், ”எஸ்வி சேகர் மன்னிப்பு கோரவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பெண்களின் கண்ணியத்தை தரக்குறைவாக பேசியுள்ளார். பல பெண் பத்திரிகையாளர்களை அவர் தரக்குறைவாக பேசியதாக தான் குற்றச்சாட்டு உள்ளது” என்று கூறியது. இதையடுத்து எஸ்வி சேகர் தரப்பில், ”அவர் மெசேஜை பார்வர்ட் தான் செய்தார். பிறகு டெலிட்டும் செய்தார். புகாரளித்த பெண் பத்திரிகையாளர் வழக்கை திரும்ப பெற்றுவிட்டார். இருப்பினும் பத்திரிகையாளர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கோரியதால் தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களிடம் நேரடியாக சந்தித்து மன்னிப்பு கோரவும் தயாராக இருக்கிறார். பெண் பத்திரிகையாளர்களிடம் தன் தரப்பு விளக்கம் அளிக்கவும் ரெடியாக இருக்கிறார்.” என்று கூறப்பட்டது.

இதை கேட்ட உச்சநீதிமன்றம் எஸ்வி சேகர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டது. மேலும் அவர் சரணடையும் காலஅவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி வழக்கில் எதிர் மனுதாரராக பெண் பத்திரிகையாளர்களையும் இணைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.