22 தொகுதிகளை கேட்கும் டிடிவி… பாஜக – அமமுக பேச்சுவார்த்தை.!!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் தங்களது பணியை இன்று முதல் தொடங்கி இருக்கிறது. முதலாவதாக இன்று தூத்துக்குடியில் வைத்து தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை குழுவினர் கேட்டறிந்தனர். தொழில் துறையினர், விவசாயிகள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் பங்கேற்று திமுக குழுவினரிடம் மனு அளித்தனர்.

தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழலில் யார் யாருடன் கூட்டணியில் தொடருவார்கள், புதிய அணி அமையுமா? போன்ற பேச்சுக்கள் இப்போதே அடிபடத் தொடங்கி விட்டன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வந்தாலும் கூட கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க காத்திருக்கிறது.

வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பாமக, பாஜக கூட்டணியா? அல்லது அதிமுக கூட்டணியா? என்பதை இறுதி செய்யாமல் உள்ளது. தேமுதிகவும் மவுனமாக இருக்கிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணிகளை தொடங்கி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே, டிடிவி தினகரனின் அமமுக, ஒபிஎஸ் அணியினர் பாஜகவுடன் கூட்டணி என நீண்ட நாட்களாகச் மறைமுக தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அமமுக, பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தையைத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொங்கு மண்டலம், டெல்டா பகுதி வட மற்றும் தென் மாவட்டங்கள் என அனைத்து மண்டலங்களிலும் போட்டியிட அமமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் 22 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும், போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, அரக்கோணம், ஆரணி, தென் சென்னை, வட சென்னை, சேலம், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர், சிதம்பரம், தென்காசி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பொள்ளாச்சி, விருதுநகர் மற்றும் நெல்லை உள்ளிட்ட தொகுதிகளை அமமுக கேட்டுள்ளது. ஆனால், 22 தொகுதிகளை ஒதுக்க பாஜக தயக்கம் காட்டி வருவதாகவும் 11 முதல் 15 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 11 ஆம் தேதி சென்னை வரும்போது கூட்டணி குறித்து பேசப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் இருந்தும் தொகுதிப்பட்டியலை பாஜக தலைமை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.