திருப்பூர்: நாடு முழுவதும் ரூ.20 நாணயங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்திற்கு வந்தது. ஆனால், ரூ.10 நாணயம் அறிமுகப்படுத்தியபோது, எற்பட்ட குழப்பம் வணிகர்கள், பொது மக்களிடையே தற்போது இல்லை.
நாடு முழுவதும் ரூ.10 நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் வந்தபோது, மக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் குழப்பம் இருந்தது. பல்வேறு பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வணிகர்கள் பெற மறுத்தனர். அரசு பேருந்துகளிலும் நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயங்களை பெற மறுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயங்கள் செல்லும் என அறிவிப்பு வெளியிட்டது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களும் பத்து ரூபாய் நாணயங்களை வணிகர்கள் பெற மறுக்கக்கூடாது என உத்தரவிட்டனர். அதன்பிறகு 10 ரூபாய் நாணயம் புழக்கம் சீரானது. அதேபோல் தற்போது ரூ.20 நாணயங்கள் பெருமளவு புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு முதல் 20 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்தாலும் கூட, தற்போது அதிக அளவு பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது. ஆனால், 10 ரூபாய் நாணயங்கள் வந்தபோது இருந்த குழப்பம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே இல்லை. அனைத்து கடைகளிலும் 20 ரூபாய் நாணயங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். அதேபோல், பொதுமக்களுக்கு மீதி தொகைக்கு 20 ரூபாய் நாணயங்கள் சர்வ சாதாரணமாக வழங்கப்படுகிறது. பொதுமக்களும் எந்த குழப்பம் இன்றி பெற்றுக் கொள்கின்றனர். இதுகுறித்து வணிகர் ஒருவர் கூறுகையில்,“20 ரூபாய் நாணயங்கள் தற்போது அதிகளவு புழக்கத்தில் உள்ளது. ஒரு சிலர் சந்தேகத்துடன் அதை பெற மறுக்கின்றனர். ஆனால், அனைத்து பகுதிகளிலும் செல்லும் என உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் அதனை பெற்றுக்கொள்கின்றனர். 10 ரூபாய் நாணயத்தில் இருந்த குழப்பம் 20 ரூபாய் நாணயத்தில் இல்லை” என்றார்.