நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்!! 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப சென்னை மாநகராட்சி திட்டம்.!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 14), பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை, தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், இதுவரை இல்லாத திட்டமாக தமிழக பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இரு நிகழ்வுகளையும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட பல இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9. 30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட்டை, முதல் முறையாக சென்னையின் 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, டைடல் பார்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் 14.03.2025 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல், தமிழக பட்ஜெட் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

அதேபோல், வரும் 15.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையும் எல்.இடி திரையின் வாயிலாக சென்னையின் பல பகுதிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. சென்னையில் வசிக்கும் மக்கள் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, மற்றும் அதன் முக்கிய அம்சங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வசதியை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

முதல் முறையாக சென்னை மா நகராட்சி செய்துள்ள இந்த ஏற்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவேற்பை பொறுத்து வருங்காலங்களிலும் இந்த புதிய நடைமுறையை தொடர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.