மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு..!

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒரு கோடியே 63 லட்சம் பேர் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்த நிலையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

56 லட்சத்து 50 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து சுமார் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். அரசு அறிவித்திருந்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வராதவர்கள் பலர் மேல்முறையீடு செய்யவில்லை. மேல் முறையீடு செய்தவர்களில் பல லட்சம் பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண்களின் வாக்குகளை கவர திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மேலும் விரிவுபடுத்திட அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்து நிலுவையில் உள்ள பல லட்சம் பேரில் தகுதியான சில லட்சம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மார்ச் மாதம் முதல் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுகவுக்கு தேர்தலில் நல்ல பயனைத்தரும் என்று திமுக நம்புகிறது.