பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு.!!

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்ததைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளிலும் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.

18-வது லோக்சபாவின் 2-வது கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்கியது. லோக்சபாவில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி உதவி மற்றும் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதே நேரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன.

இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வஞ்சகத்துக்கு இம்மாநிலங்களின் முதல்வர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்தப் புறக்கணிப்புக்கு பதிலடியாக ஜூலை 27-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு கூட்டியுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை கூண்டோடு புறக்கணிப்பதாகவும் இம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் ஒன்று திரண்டு மத்திய அரசின் பாரபட்சமான மத்திய பட்ஜெட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பின்னர் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடிய போதும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் லோக்சபா, ராஜ்யசபாவில் இருந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பும் செய்தனர்.