சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இவரின் இடத்தை நிரப்ப போகும் அந்த அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில்தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது 5 பேர் கொண்ட லிஸ்டை எடுத்து இருந்தார். அதில் சிவதாஸ் மீனாவை டிக் செய்துள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியான டி.வி.சோமநாதனும் இந்த போட்டியில் இருந்தனர். இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார். 1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர் இருக்கிறார். இவரும் மூத்த அதிகாரி. கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.
அதுல்யமிஸ்ரா இதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் அரசின் டாப் தரப்பிற்கு மிகவும் நெருக்கம். அதோடு இவரும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். ஜித்தேந்திரநாத் ஸ்வைன் அதிகாரியும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்ஸும் இருந்தார். இவர் 1992 தமிழ்நாடு பேச்சை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவரின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இவர் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவரும் இந்த ரேஸில் இருந்தார்.
ஆனால் இவர்கள் எல்லாம் ரேஸில் இருந்தாலும் சிவதாஸ் மீனாவைத்தான் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ளார். தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலராக, சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளார். தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் இவருக்கு தலைமை செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.
இன்னொரு பக்கம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இந்த மாதம் 28ம் தேதியோடு முடிகிறது. இதையடுத்து புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. புதிய டிஜிபிக்களுக்கான லிஸ்டை ஏற்கனவே தமிழ்நாடு அரசு உருவாக்கிவிட்டது.
அதன்படி சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், பி.கே.ரவி, ஏ.கே.விஸ்வநாதன், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்று உள்ளதாம். இவர்களின் லிஸ்டை மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது. இதையடுத்து டெல்லியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் இவர்கள் ஆலோசனைகள் மேற்கொண்டனர். தற்போதைய டிஜிபி, உள்துறை செயலாளர் அமுதா, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் சேர்ந்து ஆலோசனை செய்தனர்.
விரைவில் இந்த லிஸ்டில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அதில் இருந்து ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லிஸ்டில் இருந்து 3 பேர் ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவாலை டிஜிபியாக நியமனம் செய்யும் என்று கூறப்படுகிறது. சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.