தமிழகத்தின் இரண்டாவது பெண் பேருந்து ஓட்டுநர் – சேலத்தில் ஒரு சிங்கப்பெண் தமிழ்செல்வி..!

மிழகத்தின் இரண்டாவது பெண் பேருந்து ஓட்டுநர் – சேலத்தில் களமிறங்கிய தமிழ்செல்வி.!

சமீபத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். இவரைத் தொடர்ந்து சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராக களத்தில் இறங்கியுள்ள பெண்ணுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிப்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அருகேவுள்ள நங்கவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். கல்லூரி பேருந்தை இயக்கியதனால் சேலத்தில் முதல் முறையாக கல்லூரி பேருந்தை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை தமிழ்ச்செல்வி பெற்றார்.

இதற்கிடையே தமிழ்ச்செல்விக்கு வெளி மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்தை இயக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதனால் அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மேட்டூரில் இருந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்தை ஓட்டும் பணியில் சேர்ந்தார்.

மேட்டூரில் முதல் முறையாக தனியார் நகர பேருந்தை இயக்கும் முதல் பெண்ணாக தமிழ்ச் செல்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது தொடர்பாக தமிழ்ச்செல்வி தெரிவித்ததாவது:- எனது தந்தை மணி, லாரி ஓட்டுநராக பணியாற்றி, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பேருந்தை ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

எனக்கு லாரியை எப்படி ஓட்ட வேண்டும் என்று என் அப்பா கற்று தந்தார். இதையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக உள்ளூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி பேருந்து ஓட்டுநர் பணியில் சேர்ந்தேன். தற்போது அந்த பணியில் இருந்து விலகி, தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்..