தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான செய்திகள் பரவிய நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காவல்துறை தெளிப்படுத்தியது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததோடு புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அதோடு பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய தகவல்கள் குறித்து ஆளுநர் ஆர்.என் ரவி தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதி அடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது என்று கூறியுள்ளார்.