புதுடெல்லி: மக்களவையில் இருந்து 95, மாநிலங்களவையில் இருந்து 46 என இடைநீக்கம் செய்யப்பட்ட 141 எம்.பி.க்களும் நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழையக்கூடாது என்று மக்களவை செயலகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மக்களவை செயலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பி.,க்கள், நாடாளுமன்ற சேம்பர், லாபி, கேலரிக்குள் நுழைய முடியாது. அந்த எம்பி.,க்கள் உறுப்பினர்களாக இருக்கும் நாடாளுமன்ற குழுகளின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அவை நேரத்தில் அவர்களின் பெயர்களில் எந்த நடவடிக்கையும் நடைபெறாது. எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலம் வரை இந்தநிலை நடைமுறையில் இருக்கும். அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட எந்த நோட்டீஸ்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அந்தக் காலக்கட்டத்தில் நடைபெறும் எந்த குழுக்களின் தேர்தல்களில் அவர்களில் வாக்களிக்க முடியாது.
இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அவர்கள் தினசரி படி (daily allowance)பெற அவர்களுக்கு உரிமை இல்லை. குளிர்காலக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களுக்கு அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால், அந்த நாட்களில் பணி செய்யும் இடத்தில் அவர்கள் தங்கியிருப்பது, பிரிவு 2(டி) ன் கீழ், அவர்கள் கடமைக்காக தங்கியிருப்பதாக கருத முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான படிகள் மற்றும் ஓய்வுதியம் சட்டம் 1954, காலத்துக்கு ஏற்ப திருத்தப்படும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் மக்களவை, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வந்தன. திங்கள் கிழமை மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இருக்கைக்குத் திரும்புமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபாநாயகர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டபோதும் அவர்கள் திரும்பவில்லை. இதையடுத்து மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல அமளியில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் என மொத்தம் 78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த வாரம் மக்களவையில் 13 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் ஒரு எம்.பி. என மொத்தம் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து 2 அவைகளிலும் சேர்ந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இதே கோரிக்கையை முன்வைத்து செவ்வாய்க்கிழமையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 49 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதையடுத்து அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரலாற்றில் முதல்முறை: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் நடந்தது தொடர்பாக, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் அறிக்கைகள் மற்றும் விவாதத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்காக மொத்தம் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே கூட்டத்தொடரில் 141 எம்.பி.க்கள் 2 அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.