சென்னை: மே 12ல் நடைபெறுவதாக இருந்த தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
12 மணி நேர வேலையை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் நேற்று அறிவித்ததை அடுத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அன்றைய தினமே ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை எதிர்த்து தொழிற்சங்கங்கள் மே 12ம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் வேலு, அன்பரசன், சி.வி.கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், 12 மணி நேர வேலை சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக அரசு எப்போதுமே தொழிலாளர்களின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக விளங்கும். தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்கவுமே சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் நலனை பாதுகாக்க கூடிய பல அம்சங்கள் சட்டத்தில் இருந்தாலும் சில தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது என்று கூறினார். இந்நிலையில், மே 12ல் நடைபெறுவதாக இருந்த தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.