உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்… தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய முடிவு..?

மிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வார்டு மறுவரையறை செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

அதன்படி 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்வானவர்களின் பதவிக்காலம் ஜனவரி மாதம் 5ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் இதற்கான தேர்தல் நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் 45 நாட்களுக்கு முன்னர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இருப்பினும் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

இந்நிலையில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்காகத் தனி மற்றும் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அவசரச் சட்டத்தைக் கொண்டு வரத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 6ஆம் தேதி காலை 09.30 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற உள்ளார். அதன் பின்னர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தனி மற்றும் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசரச் சட்ட மசோதாவைத் தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.