கோவையில் பயங்கரம்… கார், மினி லாரி நேருக்கு நேர் மோதல் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி..

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இரவி பேருரை அடுத்த குட்டியில் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம் (வயது 60) இவரது மனைவி ஷீபா (வயது 55) இவர்களது மகள் அலீனா ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகி விட்டது.. பிறந்து 2 மாதமே ஆன ஆரோன் என்ற ஆண் குழந்தை உள்ளது .அலினாவின் கணவர் தாமஸ் சூரிய கோஸ் துபாயில் வேலை செய்து வருகிறார். நர்சிங் படித்துள்ள அலினா ஒரு தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார் .அந்த தேர்வு வருகிற 17-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.அலினாவின் தம்பி அதுல் பெங்களூரில் வசித்து வருகிறார். எனவே அவருடைய வீட்டில் தங்கி இருந்து அந்த தேர்வுக்கு செல்ல அவர் முடிவு செய்தார். இதற்காக அலினா அவருடைய பெற்றோர் மற்றும் 2 மாத குழந்தையுடன் பெங்களூர் செல்ல நேற்று காரில் புறப்பட்டனர் .காரை ஜேக்கப் ஆபிரகாம் ஓட்ட முன்பக்கத்தில் அவரது மனைவி ஷீபாவும், பின் இருக்கையில் மகள் அலினா .பேரன் ஆரோன் ஆகியோர் இருந்தனர் அவர்கள் கோவை அருகே உள்ள மதுக்கரையை தாண்டி எல். அன்.டி. பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் அப்போது போடிபாளையம் பிரிவு அருகே சென்றபோது திடீரென்று நிலைதடுமாறி கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இந்த சாலை இரு வழி சாலை என்பதால் அந்தக் கார் எதிரே வாகனங்கள் வரும் பகுதிக்குச் சென்றது. இதனால் அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காருக்குள் இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி ஜேக்கப் ஆபிரகாம், அவருடைய மனைவி ஷீபா ,பேரன் ஆரோன் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மதுக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று காருக்குள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அலினாவை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் . அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் மினி லாரி ஓட்டி வந்த கரூரை சேர்ந்த சக்திவேல் ( வயது 39) என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்..