கோவை குனியமுத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (வயது 25) பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் நேற்று இரவு செல்வபுரம், தில்லைநகருக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 11- 45 மணியளவில் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் ரஹ்மத்துல்லாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ரஹ்மத்துல்லாஹ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ரஹமத்துல்லா இறந்தார்.இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.கொலையாளியை பிடிக்க உதவி போலீஸ் கமிஷனர் ரகுபதி ராஜா, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.இவர்கள் கொலை நடந்த 6 மணி நேரத்தில் கொலை வழக்கில் துப்பு துலக்கி கொலையாளியை கைது செய்தனர். விசாரணையில் அவர் செல்வபுரம், அவுசிங் யூனிட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற லிங்கேஸ்வரன் (வயது 27) என்பது தெரியவந்தது. மதுவாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சந்தோசை ,ரஹ்மத்துல்லா 2 நாட்களுக்கு முன் தாக்கினாராம். நேற்றும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் என்ற லிங்கேஸ்வரன் அருகில் உள்ள தனது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்து ரஹ்மத்துல்லாவின் மார்பில் குத்தினாராம் .கொலை செய்யப்பட்ட ரஹ்மத்துல்லா மீது திருட்டு, வழிப்பறி உள்பட 12 வழக்குகள் உள்ளது.இந்த கொலை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..