கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஏ. மேட்டுப்பாளையம் ,கரை பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 61) விவசாயி.இவரது மனைவி தங்கமணி ( வயது 56 ) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் சுப்பிரமணியம் தங்கமணியும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சுப்பிரமணியம் நேற்று காலை சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீடு திறந்து கிடந்தது . இதனால் அவர் சமையலறைக்கு சென்று பார்த்த போது மனைவி தங்கமணி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். .இதை பார்த்து சுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இது குறித்து அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.போலீஸ் துப்பறியும் நாயும் கொண்டு செல்லப்பட்டது.அது யாரையும் பிடிக்கவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் தங்கமணி கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்து நகை- பணம் எதுவும் கொள்ளையடிக்கபடவில்லை. இதனால் இந்த கொலை எதற்காக நடந்தது ?கொலை செய்தவர்கள் யார்? நகை பணம் கொள்ளை அடிக்கப்படாதது போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி அன்னூர் பக்கம் உள்ள சுக்கிரமணி கவுண்டன் புதூர் அம்மா செட்டி மகன் காளியப்பன் ( வயது 29 ) மற்றும் குன்னுரை சேர்ந்த வரும் தற்போது குமரன் குன்று பி.ஆர்.எஸ் .கார்டன் பகுதியில் வசித்து வரும் அவரது நண்பர் சுதாகர் என்ற வேங்கை சுதாகர் (வயது 30)ஆகியோரை நேற்றிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கன்னியப்பன் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கொலை செய்யப்பட்ட தங்கமணிக்கு உறவினர் ஆவார். இவரும் மற்றொரு குற்றவாளியான சுரேஷ் என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். ‘கன்னியப்பனுக்கும்,தங்கமணிக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் கன்னியப்பன் தனது நண்பர் சுதாகருடன் சேர்ந்து தங்க மணியை கொலை செய்தது தெரியவந்தது. தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்..