பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் – 23 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள முசகைல் மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து, லாரி, வேன்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் சிலர் இன்று அதிகாலை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து அந்த வாகனங்களில் பஞ்சாபை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உதவி ஆணையர் முசக்கைல் நஜீப் கக்கர் கூறியதாவது;

‘பஞ்சாபை பலுசிஸ்தானுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் பலர் பேருந்துகள், லாரிகள் மற்றும் வேன்களை வழிமறித்து 20க்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் பாஞ்சாபை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 10 வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் இருப்பதாக தெரிகிறது’ என தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தான் முதலமைச்சர் சர்பராஸ் புக்டி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ‘தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவிரவாதிகளும், அவர்களுக்கு உதவுபவர்களும் இதற்கான பதிலை சொல்லியே ஆக வேண்டும். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.