இஸ்ரேல் – ஹமாஸ் போரில் நிகழும் மனிதநேய நெருக்கடி ஏற்பதற்கில்லை. போரை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது மட்டுமே ஒரு வழி…

ஜெனீவா: ‘இஸ்ரேல் – ஹமாஸ் போரில் நிகழும் மனிதநேய நெருக்கடி ஏற்பதற்கில்லை. போரை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது மட்டுமே ஒரு வழி’ என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்துவருகிறது. காசா பேரழிவை சந்தித்து வருகிறது. ஹமாஸ் அழிக்கப்படும்வரை போர் தொடரும் என்ற அறைகூவலுடன் இஸ்ரேல் வான்வழி, தரைவழி என கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காசா உருக்குலைந்துவிட்டது. இதுவரை 25000 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற இந்தியா மனிதாபிமான நெருக்கடிகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா காம்போஜ் பேசுகையில், ‘இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக பெருமளவில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உயிர் பறிபோயுள்ளது. இதனால் மனிதநேய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் ஏற்க இயலாதது. போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு நேர்வதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் தான் தூண்டுகோளாக இருந்தது என்பதையும் இந்தியா அறிந்திருக்கிறது. அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கும் இந்தியா சம அளவிலான கண்டனத்தை தெரிவிக்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை எள்ளளவும் சகித்துக் கொள்ளாது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக இந்தியா இதுவரை 70 டன் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்துள்ளது. 16.5 டன் மருந்து, மருத்துவ உபகரணங்களைக் கொடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்தே இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. இந்தப் போர் மேலும் தீவிரமடையாமல் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் தடை ஏற்படக் கூடாது. அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்படுவதை நோக்கி செயல்பட வேண்டும். பேச்சுவார்த்தையும், தூதரக ரீதியிலான ஒத்துழைப்பும் மட்டுமே தீர்வாக இருக்க முடியும். இந்தியத் தலைமை இஸ்ரேல், பாலஸ்தீன் தரப்புகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. நாங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தடைபடக்கூடாது என்றே வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2720 ஆனது மனிதாபிமான உதவிகள் சென்றுசேர்வதை உறுதி செய்யும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.