வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்: கட்டணமின்றி மீண்டும் பெறலாம்…

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி கடந்து சென்ற நிலையில், பெருமழை தென்மாவட்டங்களை பதம் பார்த்தது. குறிப்பாக நெல்லையிலும், தூத்துக்குடியிலும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை உருக்குலைந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை கட்டணமின்றி மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் இன்று ஜனவரி 8ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் கட்டணமின்றி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை தமிழக அரசு மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் உடை, உடைமை மற்றும் பொருட்கள், முக்கிய ஆவணங்களைப் பறிகொடுத்தனர். இதனால், நெல்லையில் வெள்ளத்தில் ஆவணங்களை இழந்த பொதுமக்கள், ஆவணங்களைப் பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்,”வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்ரூ ஜனவரி 8 சிறப்பு முகாம் தொடங்க உள்ளது. அதில் ஆவணங்களை இழந்தவர்கள் கட்டணமின்றி ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.