தேனி: தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய முடியாவிட்டால் அடுத்த நாளே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார் அமைச்சர் மூர்த்தி.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கி உள்ளார். அவருக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக சார்பில் நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் களம் சூடுபிடித்துள்ளது.
டிடிவி தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.கவில் ஒன்றாக இருந்தவர்கள். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் தனியாகச் செயல்பட்டபோதும், அமமகவை தொடங்கிய போதும் அவருக்கு வலது கரமாக இருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். பின்னர் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது டிடிவி தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் நேருக்கு நேர் மோதுவதால் தேனி இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பல்வேறு பகுதிகளிலும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், தேனி தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய முடியாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் பி.மூர்த்தி ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் வெல்லாவிட்டால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கூறினார்.
அமைச்சர் மூர்த்தி பேசுகையில், “தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்வேன்.
திமுக வேட்பாளரின் வெற்றிக்காக உண்மையாக உழைக்க வேண்டும், கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால் தான் நான் தற்போது அமைச்சராக பதவிக்கு வந்துள்ளேன். எனவே கட்சியினர், சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்” எனப் பேசினார்.