கணக்கு சரியில்லையே… டாஸ்மாக் காலி மது பாட்டில் இவ்ளோ வசூலா..? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு.!!

சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள கணக்கில் தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதால், தெளிவான புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் வனப்பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் டாஸ்மாக் தரப்பில் புதிய முறை செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, ரூ.10 கூடுதலாக தந்து, மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, அந்த காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்ப ஒப்படைக்கும்போது, 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.. இந்த திட்டமானது, வனவிலங்குகள் நிறைந்த மலைப்பகுதிகளின் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்குநடுவில், டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது, எனவே, காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தினை விரிவுபடுத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு, மலை மாவட்டங்கள் தவிர, வேறு சில மாவட்டங்களிலும் செயல்படுத்தியும் வருகிறது. இப்போது, சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது…

இப்படிப்பட்ட டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் முன்பு தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார்..

அதில், “மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் 12 மாவட்டங்களிலிருந்து இதுவரை ரூ.306 கோடியே 32 லட்சத்து 25,330 வசூலிக்கப்பட்டுள்ளது. பாட்டில்களை திரும்ப தந்தவர்களுக்கு ரூ.297 கோடியே 97 லட்சத்து 61,280 திரும்ப தரப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை திரும்பத்தராமல் இருப்பதன் மூலம் உபரியாக உள்ள ரூ.9 கோடியே 19 லட்சத்து 64,050 தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 மாவட்டங்களில் இந்த திட்டம் புதிதாக செயல்படுத்தப்பட்டு ரூ. 56 கோடியே 45 லட்சத்து 41,260 வசூலிக்கப்பட்டு காலி பாட்டில்களை திரும்ப தந்தவர்களுக்கு ரூ. 54 கோடியே 64 லட்சத்து 88,870 திரும்ப தரப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ரூ.2 கோடியே 19 லட்சத்து 47,350 தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் திரும்ப தரப்பட்ட தொகை தொடர்பாக ஆய்வு செய்து உரிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த அறிக்கையிலுள்ள கணக்கில் தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

உடனே, கணக்கு தொகையை சரி பார்த்து மறுபடியும் புதிய அறிக்கையை தாக்கல் செய்வதாக டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் கூறினார்… இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தெளிவான புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.