கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஓபாலதாசப்பா மகன் பிரகாஷ்(40) மற்றும் ஹம்பன்னா மகன் மணிகண்டா (27) ஆகியோரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட பிரகாஷ்(40) மற்றும் மணிகண்டா (27) ஆகிய இரண்டு நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்த வழக்கு குற்றவாளிகளான பிரகாஷ்(40) மற்றும் மணிகண்டா (27) ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கலப்படம் மதுபானம் தயார் செய்த வழக்கில் இதுவரை 7 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081.00100என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.