கஞ்சா சாக்லேட் வழக்கில் கைதான வடமாநில வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த மாதம் சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல் (வயது 40)என்பவர் கைது செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதி மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சஞ்சயகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் வழக்கு குற்றவாளியான சஞ்சயகுமார் சமல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது..