தஞ்சை புறவழிச்சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த செடிகள் மண்டிய பகுதியில் கால்கள் கட்டப்பட்டு,, அரை நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாதாக்கோட்டை பைபாஸ் சாலையை ஓட்டி உள்ள அடர்ந்த செடிகள் மண்டிய பகுதியில் இருந்து துர்நாற்றம் அடிப்பதாக தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து, வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் நித்யா தலைமையில். ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் துர்நாற்றம் அடித்த பகுதியில் சோதனை செய்தனர்..
அங்கு 40 வயது மதிக்கத்தக்க சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டனர்.
கால்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைத்து பேக்கேஜ் கட்டும் நைலான் ஒயரால் கட்டப்பட்டு அரை நிர்வாண கோலத்தில். காயத்தோடு சடலம் கிடந்தது. அருகில் காலணிகள் இருந்தன. தலைமுடி பாதி சிதறி கிடந்தது. பாதங்கள் மண் தரையில் உதைத்து கொண்ட அடையாளங்கள் இருந்தன.
மர்மமான முறையில் கிடந்த சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தஞ்சையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் வந்து உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
வேறு எங்கேயாவது கொலை செய்துவிட்டு இந்த இடத்தில் வீசி சென்று இருக்கலாமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் ஒரு முடிவுக்கு வர முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.