அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் அதிகாலையில் குவிந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் விடுதி பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக வெளியான புகார்களை தொடர்ந்து போலீசார் இந்த அதிரடி ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
இதில் மாணவர்கள் உட்பட மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலைய பிணையிலும் நீதிபதியின், சொந்த பிணையிலும் மாணவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இதில் மாணவி ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த மாணவிக்கு சீனியர் மாணவராக இருந்த காதலனே கஞ்சா பழக்கத்தை அறிமுகப்படுத்தி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடம் இருந்து கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த மூன்று பேர் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதில் டப்லு என்பவர் தாபாவில் வேலை செய்து கொண்டே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தது தெரிய வந்தது. மகேஷ் குமார், சுனில் குமார் ஆகியோர் பெங்களூரில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வாங்கி வந்து இங்கு வேலை செய்து வரும் டப்லுவிடம் கொடுத்து விற்று வந்ததும் தெரியவந்தது.