குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு – 2 கொள்ளயர்கள் கைது..!

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் கண்ணம்மா(வயது 75) இவர் கடந்த 7-ந் தேதி தனது மகன் வீட்டின் முன்பு இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கண்ணம்மாவின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது சம்மந்தமாக கண்ணம்மா காரமடை காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் உத்தரவிட்டார் . இதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் அப்துல் சமது (35) மற்றும் நவ்ஷத் மகன் நிஷாத் (32) ஆகியோர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் இவர்களை நேற்று கைது செய்தனர் . இவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகை மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..