திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவசரண்யா. இவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த 3 நாட்களாக தனது மகளுடன், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
சிவசரண்யாவின் மகள் ஜனன்தியாஸ்ரீ பழனியில் உள்ள பள்ளியில் 1 – ம் வகுப்பு படித்து வருகிறார். சிவசரண்யாவின் சொந்த வீடு பழனியில் உள்ளது. அங்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். இவரது மகளும் அங்கு உள்ளார்.
சிவசரண்யா மட்டும் பணி காரணமாக கோவையில் தங்கி இருந்தும்,பழனிக்கு சென்று வருவதும் வாடிக்கை. இந்த நிலையில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுமி, தனது தாயாரின் பணியை நேரில் பார்க்கவும், தாயாருடன் நேரத்தை கழிக்கவும் ஆசைப்பட்டு உள்ளார். முதலில் சிவசரண்யா யோசித்த அவர் பின்னர் தான் பார்க்கும் பணியை பார்த்தால் குழந்தைக்கும் ஒரு புது அனுபவம் கிடைக்குமே என எண்ணிய சிவசரண்யா அதற்கு சம்மதித்து உள்ளார்.
இதையடுத்து பழனியில் இருந்து மகளை கோவை அழைத்து வந்து உள்ளார். தான் பணியாற்றும் இடத்துக்கே மகளையும் அழைத்துச் சென்று, தன்னுடன் வைத்துக் கொண்டு போக்குவரத்தையும் கண்காணித்து சரி செய்த படியே தனது மகளையும் கண்காணிப்பது வித்தியாசமாக உள்ளது. மகளும் தாய், போக்குவரத்தை ஓழுங்கு செய்வதை பார்த்து ஆர்வமுடன் கவனித்துக் கொண்டு இருக்கிறார்.
கோவை – அவினாசி சாலைப் பகுதியில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு எந்த வழியாக செல்வது என்பதில் சற்று குழப்பம் நிலவி வருகிறது. அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் வழிகளை கூறி அனுப்பி வைக்கின்றனர். மேலும் இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணமும் வாகனங்களை செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சிவ சரண்யா, மகளுடன் களத்தில் இறங்கி நின்று கடமையுடன் கண்காணிப்பதை பார்க்கும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சக போலீசாரும் தாயுடன், நிற்கும் மகளுடன் பாசத்துடன் பேசி விட்டு செல்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது