சிங்கப்பூரில் மீண்டும் கொரனோ பரவல் எதிரொலி… கோவை வரும் விமான பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்.!!

கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும் சார்ஜாவுக்கும், 5 நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறும்போது:

விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பாதிப்பு கண்டறிய தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரத்தியேக வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை வெளியிடப்படவில்லை இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

கோவை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா கூறும் போது:-

கடந்த முறை கொரோனா தொற்று பரவிய போது மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதால் நோய் தொற்று பரவலை குறித்து தற்போது பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்று தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் பிரத்யேக தகவல் வந்தால் கடைபிடிக்கப்படும் என்றார்.