கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைக் கூட்டங்கள் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக படை எடுத்து வருகிறது. மேலும் தற்போது தடாகம் அதனை சுற்றி உள்ள வனப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் இந்த யானைகள் அருகில் உள்ள பெரிய தடாகம், வரப்பாளையம் வீரபாண்டி, சோமையனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்து வருகிறது. இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு அதிகாலை 4 மணி அளவில் சோமையனூர் பகுதியில் உள்ள நல்ல தம்பி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் வீட்டின் அருகே இருந்த வாழை மரத்தை சாப்பிட்டு உள்ளது. மேலும் வீட்டு சுவற்றின் அருகே வந்து பிளிறியதால் வீட்டின் உள்ளே இருந்த பாலாமணி என்பவர் பயத்தினால் தனது தம்பியின் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார். இதனைப் பார்த்த யானை பாலாமணியை துரத்தி கீழே தள்ளியது . அப்போது குழந்தை பயத்தால் அலறியதால் யானை அங்கிருந்து சென்றது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் பாலாமணி மற்றும் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .யானை தள்ளியதில் பாலாமணிக்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை எவ்வித காயமும் இன்றி தப்பியது.
இது குறித்து பாலாமணியின் உறவினர் ரேவதி கூறுகையில்
இரவு வழக்கம் போல் பாலாமணி என்னுடைய குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது யானை வீட்டின் சுவற்றின் அருகே நின்று கொண்டு பிளிறியதால் பயத்தில் தன்னையும் குழந்தையும் பாதுகாக்க அருகில் உள்ள வீட்டிற்கு செல்ல முயன்ற போது யானை அவரை துரத்தி கீழே தள்ளியது. பின்னர் அவரை காலால் மிதிக்க முயன்ற போது குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட யானை அப்படியே அங்கிருந்து திரும்பிச் சென்றது. யானை தள்ளியதில் பாலாமணிக்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது . நல்வாய்ப்பாக இருவரும் யானையிடம் இருந்து உயிர் தப்பினர் என தெரிவித்தார்.