ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கரளவாடி கிராமத்தில் உள்ள விவசாயி நடராஜன் (58) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. மேலும் அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை மரங்கள் மற்றும் தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த முள்கம்பி வேலிகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் இணைந்து சத்தம் போட்டு காட்டு யானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்கள், தென்னை மரங்கள், மற்றும் முள் கம்பி வேலிக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி மலைப்பகுதியில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள் – விவசாயிகள் கவலை..!
