கோவை:
பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சங்கீதா அவரை கண்டித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சங்கிதா கோபித்து கொண்டு எம்.ஜி.புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
சம்பவத்தன்று பார்த்தசாரதி, சங்கீதாவை பார்ப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு 2 பேரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்து பார்த்தசாரதி சங்கீதாவை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து சங்கீதா வடக்கிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வருகின்றனர்.