கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அருகே பாஜக தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது.இங்கு கடந்த 13-ந்தேதி மாலையில் ஒரு ஆசாமி திடீரென்று உள்ளே புகுந்தார். அவர் அலுவலகத்தின் கதவை உள் பக்கமாக தாழ்போட முயன்றார்.இதைப் பார்த்த அலுவலக ஊழியர் விஜயன் அவரை தடுத்து கேட்டுக்கு வெளியே தள்ளினார். பின்னர் அந்த வாலிபர் எழுந்து அங்கிருந்து சென்று விட்டார்.இது குறித்துஅலுவலக ஊழியர் விஜயன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.இந்த நிலையில் அந்த வாலிபர் அவினாசி ரோட்டில் உள்ள ஜி.டி ஆடிட்டோரியம் அருகே பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை யடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த நபரும் பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் புகுந்த நபரும் ஒருவர் தான் என தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் திடீரென்று பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து போக்குவரத்துபுலனாய்வு போலீசார் கூறியதாவது:- பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் புகுந்த நபர் அவினாசி ரோடு.ஜி.டி. மியூசியம் அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்த காட்சிசி.சி.டிவி.கேமராவில் பதிவாகியுள்ளது உள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டு ரேஸ்கோர்ஸ் போலீசில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறந்தவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இந்த நிலையில் இறந்தவரின் கைரேகை மூலம் அந்த நபர் கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கில் கைதானவரின் கைரேகையுடன் ஒத்து போனது தெரியவந்தது .உடனே தனிப்படையினர்கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று விவரங்களை சேகரித்தனர். இதில் இறந்தவர் மகாதேவன் என்பவரின் மகன் கார்த்திக் என்பதும் அவர் ஒரு வழக்கில் கைதான போது கொடுத்த முகவரிக்கு சென்று தனிப்படை போலீசார் பார்த்தனர். ஆனால் அந்த முகவரியில் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து 2004 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கார்த்திக்குடன் கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் கார்த்திக் குடும்ப உறுப்பினரை கண்டறிந்து உடலை ஒப்படைக்கவும் போலீசார் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்..