சாலையில் கிடந்த செல்போனை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களின் நேர்மையை பாராட்டிய இன்ஸ்பெக்டர்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் நேற்று மாலை சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் மூன்று பேரும் சேர்ந்து ஒரு செல்போனை கொடுத்து இந்த செல்போன் மணிக்கூண்டு அடுத்துள்ள பள்ளிவாசல் அருகே சாலையில் கீழே கிடந்ததாகவும், இதை ஒப்படைக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். சிறுவர்களின் நேர்மையை கண்டு வியந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் அவர்கள் மூன்று பேரின் பெயர் மற்றும் எங்கு படிக்கிறீர்கள் என கேட்டபோது சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் முகமது ஹன்சிப் கான், லிட்டில் பிளவர் பள்ளியில் படிக்கும் சையத் ரிபய், சத்தி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஹாதிம் முகாஷ் ஷா என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று சிறுவர்களுக்கும் இன்ஸ்பெக்டர் முருகேசன் இனிப்புகள் வழங்கி பாராட்டியதோடு மூன்று பேர் படிக்கும் பள்ளிகளுக்கு நேரில் வந்து மூன்று பேரின் நேர்மையான செயல் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறினார். சாலையில்  கிடந்த செல்போனை மூன்று சிறுவர்கள் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.