கேரள – தமிழக எல்லையில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டும் கேரள வாகனங்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லையில் உள்ள ஊர்களில் கொட்டும் சம்பவம் தொடர் கதையாக இருந்து வரும் நிலையில், இதுகுறித்து சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அரசு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே லாரி எடுத்துக் கொண்டு செல்வேன் என பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இந்த சம்பவம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர்.
அதனை தொடர்ந்து கேரள மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நடுகல்லூரில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் கேரளா மண்டல புற்றுநோய் மையம் மற்றும் க்ரெடென்ஸ் மருத்துவமனையின் கழிவுகள்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவ கழிவுகளில் இருந்து மருந்து குப்பிகள், சிரிஞ்சு, ரத்த சாம்பிள்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தமிழகத்தை சேர்ந்த 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள குப்பை ஏஜெண்டுகளை கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.