உதவியாளரை அழைத்து ஷூ எடுத்து வர சொன்ன கள்ளக்குறிச்சி கலெக்டர்- பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..!

ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜதாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக ஆட்சியர் ஷ்ரவண் குமார், தனது காலணியை கோயிலுக்கு வெளியே கழற்றினார். அப்போது, சிறிது நேரம் அங்கும் இங்கும் தேடிய ஆட்சியர், அங்கிருந்த தனது டவாலியை சைகை மூலம் அழைத்து, தனது காலணியை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, வயதில் மூத்தவரான டவாலி ஆட்சியரின் ஷூவை கைகளால் எடுத்து பின்தொடர்ந்து சென்றார். தனது காலணியை உதவியாளரை வைத்து எடுக்க சொன்ன ஆட்சியர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆட்சியர் ஷ்ரவண் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.