கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை சிலை… நீதிபதி CJI சந்திரசூட் சீர்திருத்தம்.!!

டெல்லி: கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்ற நூலகத்தில் நேற்று திறக்கப்பட்டது. இந்த சிலையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.

புதிய சிலையின் சிறப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சினிமாக்களில் வரும் கோர்ட் சீன்களில் நீதி தேவதையின் சிலையில் கண்கள் கருப்பு துணிகளால் கட்டப்பட்டிருக்கும், ஒரு கையில் தராசும், மற்றொரு கையில் வாளும் இருக்கும். சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி கொடுக்கும் போது ஏழை, பணக்காரன், சொந்தம், பந்தம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற வித்தியாசங்கள் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது என சினிமா டயலாக்குகள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.

அது உண்மைதான், இந்தியாவின் நீதி தேவதையின் சிலை கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும். அதாவது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதையும் பணம், அதிகாரம் ஆகியவற்றை சட்டம் பார்க்காது என்பதையும் குறிக்கும் வகையில் கண்கள் கட்டப்பட்டு இருக்கும். அது போல் கையில் இருக்கும் வாள் வரலாற்று ரீதியில் அநீதியை தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.

வலது கையில் இருக்கும் தராசு, தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை குறிக்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான நூலகத்தில் கண்கள் கட்டப்படாத வாள் இல்லாத நீதி தேவதையின் சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அறிவுறுத்தலின் பேரில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சட்டம் என்பது ஒரு இருட்டறை அல்ல என்பதை குறிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய நீதி தேவதையின் சிலையில் வாளுக்கு பதிலாக அரசியல் அமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது. இதில் வாள் என்பது வன்முறையை குறிப்பதாக இருப்பதால் அதற்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகத்தை வைத்ததாக சந்திரசூட் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த பழைய சிலை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. அது போல் புதிய சிலையில் தராசு இருக்கிறது. நெற்றியில் திலகமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலனித்துவ முறையை மாற்றும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு குற்றவியல் சட்டங்களின் பெயர்களை பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்ஷா சம்ஹிதா, பாரதி. சாக்ஷிய அதிநியம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அது போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீதிபதியை மை லார்டு என அழைக்கும் வழக்கமும் தற்போது இல்லை. ஒரு முறை ஆமாம் என சொல்வதற்கு பதிலாக யா யா என வழக்கறிஞர் ஒருவர் தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு பதில் அளித்தார்.

அதற்கு சந்திசூட், உங்களை ஒரு கேள்வி கேட்டால், அதற்கு ஆமாம், இல்லை என்பதை மட்டும் பதிலாக கொடுங்கள். இது என்ன காபி ஷாப்பா? யா யா என சொல்வதற்கு என்று கடிந்து கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றார். அவர் நீதித் துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

அரசியலமைப்பு அமர்வின் விசாரணையை யூடியூபில் நேரலையில் ஒளிபரப்புவது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணைகளை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயற்கை மொழி செயலாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது என பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அவர் வரும் நவம்பர் 11 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.