முதியவரிடம் ரூ. 67 லட்சம் ஆன்லைன் மோசடி – மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

கோவை ராம் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 75)அவரை கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி மும்பை பாந்த்ரா போலீஸ்நிலையத்தில் இருந்து வினய் குமார் சவுடி என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் ஆன்லைன் மோசடி ஆசாமிகள் ஜார்ஜின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாகவும், எனவே ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்ய இருப்பதாகவும் கூறினார். மறுநாள் ஆகாஷ் குல்கரி என்பவர் போலீஸ் உயர் அதிகாரி என கூறிக்கொண்டு ஜார்ஜை கைது செய்ய உள்ளோம். அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அபராத தொகையாக வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தனக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். இதனால் பயந்து போன ஜார்ஜ் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ. 67 லட்சத்தை அந்த நபருக்கு அனுப்பினார். ஆனால் மீண்டும் பணம் கேட்டு மிரட்டல் வருவதால் நிரந்தர வைப்பு தொகையான ரூ 10 லட்சத்தை நேரில் சென்று அனுப்ப வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது பணத்துக்கான தேவை குறித்து கேட்டறிந்த வங்கி மேலாளர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்குமாறு கூறினார். இதை தொடர்ந்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஜார்ஜ் புகார் செய்தார் .அதன் பேரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் சர்மா ( வயது 23) முகில் சந்தல் (வயது 24) அணில் ஜடாவ் ( வயது 24) ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் அந்த 3 பேரும் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது..